பருத்திக்கான 5 ஆண்டு திட்டம் ஜவுளித்தொழிலுக்கு ஊக்கம்
திருப்பூர்: 'மத்திய பட்ஜெட்டில் பருத்தி உற்பத்தி மேம்பாட்டுக்கான ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்,' என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பருத்தி உற்பத்தி அதிகரிக்கும்
வெங்கடாசலம், தலைமை ஆலோசகர், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சங்கம் - டாஸ்மா:
ஜவுளித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளதால், 'ஏ-டப்', பி.எல்.ஐ., திட்டம் பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மிக நீளமான பருத்தி இழை கொண்ட பஞ்சு உற்பத்திக்காக, சிறப்பு ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், எக்டருக்கு, 800 கிலோ பருத்தி விளையும் நிலையில், இந்தியாவில், 450 கிலோ மட்டும் விளைகிறது; நிச்சயமாக, தரமான பருத்தி உற்பத்தி அதிகரித்து, உள்நாட்டு தேவை பூர்த்தியடையும். விலை குறைவான பின்னல் துணி இறக்குமதிக்கு, வரி விதிக்கப்பட்டுள்ளதால், இறக்குமதி குறைந்து, உள்நாட்டு உற்பத்தி மேம்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பிரிவு, பெண் தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, ஜவுளி தொழிலுக்கு நேரடியாக பயனளிக்கும்.
பஞ்சு இறக்குமதி குறையும்
ராமன் அழகிய மணவாளன், வர்த்தக ஆலோசகர்:பருத்தி உற்பத்திக்கான ஐந்தாண்டு திட்டத்தால், மிக நீள பருத்தி இழை பஞ்சு இறக்குமதி செய்வது குறையும். ஒன்பது வகை துணி இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால, இறக்குமதி கட்டுக்குள் வரும்; விலை சற்று உயர வாய்ப்புள்ளது. ஏற்றுமதிக்கான ஊக்குவிப்பு திட்டத்தால், நிகர ஏற்றுமதி வளர்ச்சி 2 சதவீதமாக உயர்த்தும் திட்டத்துக்கு பயனாக இருக்கும். வரும், 2030 -31ல், ஏற்றுமதி 8.66 லட்சம் கோடி ரூபாயாக உயரும். 'பாரத் டிரேடு நெட்' வசதி வந்தால், சவாலாக இருக்கும் வர்த்தக ஆவண தயாரிப்பு, நிதி தேவைகள் எளிதாக கிடைக்கும். குறு, சிறு தொழில்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டம், அவசர தேவைகளுக்கு மிக உதவியாக இருக்கும்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை
ஸ்ரீகாந்த், தலைவர், திருப்பூர் 'நிட் பிரின்டர்ஸ்' அசோசியேஷன் - டெக்பா:குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அடிப்படை உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால், பெரிய நிறுவனங்கள் அதிகம் செலுகை பெற வாய்ப்புள்ளது. குறு, சிறு நிறுவனங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் எதிர்பார்ப்பு 'ஏ-டப்'. புதிய தொழில்நுட்பத்தை புகுத்த, இத்திட்டம் அவசியம் எதிர்பார்க்கப்பட்டது; இந்த பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமாக இருக்கிறது. புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்காக, எங்களது கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
மத்திய பட்ஜெட்டில், புதிய தொழில்நுட்பத்துக்கு வழிகாட்டும், 'ஏ - டப்' திட்டம்; ஏற்றுமதியாளருக்கான, வட்டி சமன்படுத்தும் திட்ட நீட்டிப்பு மற்றும் வட்டி மானியம் 5 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை தனியே அங்கீகரிக்கும் வகையில், பிரத்யேக வர்த்தக குறியீடு ஏற்படுத்தும் அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம்தான். பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாவிட்டாலும், முக்கிய அறிவிப்புகளை, இனிவரும் கூட்டத்தொடரிலாவது அறிவிக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு