உழவர் சந்தையில் பாரம்பரிய அரிசி
கோவை : கோவை சிங்காநல்லுார் உழவர் சந்தையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, பிரத்யேக அங்காடியில் பாரம்பரிய அரிசி, பல்வேறு விவசாய பொருட்களின் மதிப்புகூட்டு பொருட்களை, நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம்.
கோவையில் விவசாயிகள் எட்டு உழவர் சந்தைகளில், 634 விவசாயிகளுக்கான கடைகள் செயல்படுகின்றன. சிங்காநல்லுார் உழவர் சந்தையில் 132 கடைகள் உள்ளன.
சிங்காநல்லுார் சந்தையில் அதிக மக்கள் வருகை உள்ள சூழலில், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில், பிரத்யேக மதிப்புகூட்டு பொருட்கள் விற்பனை அங்காடி துவக்கப்பட்டுள்ளது.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை பிரிவு துணை இயக்குனர் மீனாம்பிகை கூறுகையில், ''புதிய அங்காடியில் வாழைப்பழ பொடி, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை பொடி, முருங்கை பொடி, சிறுதானிய பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், கரும்புச்சர்க்கரை, தென்னை -நீரா, உட்பட பல பொருட்கள் கிடைக்கும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
திறப்பு விழா நிகழ்வில், கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.