முகூர்த்த நாளான நேற்று பதிவுத்துறை அலுவலகம் மூடல்
கோவை : பத்திரப்பதிவு பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, சுபமுகூர்த்த நாளான நேற்று பத்திரப்பதிவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுபமுகூர்த்தம் உள்ளிட்ட மங்களகரமான நாட்களில், அரசு மற்றும் வாரவிடுமுறை நாட்களாக இருந்தாலும், அந்நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கும் பத்திரப்பதிவுத்துறையில், பணிபுரியும் 11,189 பணியாளர்களுக்கு தேவையான வசதிகளையோ, சம்பள உயர்வையோ வழங்கவில்லை; கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த டிச.,5 ல் மங்களகரமான நாளில், ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. டிச.,31 ல் ரூ. 231.51 கோடிக்கு வருவாய் கிடைத்தது.
இதனடிப்படையில் இரட்டிப்பு வருவாய் கிடைக்க வேண்டும் என்று, அரசு பதிவுத்துறை அலுவலகங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பணியாளர் சங்கங்களும் தமிழக அரசிடம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை கேட்டு, அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
விடுமுறை நாளான நேற்று பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் நேற்று கோவையிலுள்ள, 17 பத்திரப்பதிவு அலுவலகங்களும் மூடப்பட்டன. பத்திரங்கள் எதும் பதிவாகவில்லை. அலுவலகங்கள் மூடப்பட்டதால், பத்திரப்பதிவு சார்ந்த எந்த அலுவலகங்களும் இயங்கவில்லை.