என்.சி.சி., மாணவர்களுக்கு நடந்த 'ஏ' சான்றிதழ் தேர்வு

கோவை, : என்.சி.சி., மாணவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் தேர்வை, 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

என்.சி.சி., பிரிவில் இடம் பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கு, 'ஏ' சான்றிதழ் ராணுவத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கான எழுத்து தேர்வு, பிரிவு வாரியாக பல்வேறு பள்ளிகளில் நடந்தன.

2 டி.என்., காம்போசிட் தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி., சார்பில், 'ஏ' சான்றிதழ் தேர்வு கோவை டவுன்ஹால் புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

கோவை, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 19 பள்ளிகளின், எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும், 606 மாணவர்கள் பங்கேற்றனர்.

காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு மேல் அணி நடைபயிற்சி, துப்பாக்கியை கழற்றி மாட்டுதல், கையாளுதல், ராணுவம் தொடர்பாக குறியீட்டு படங்களை பார்த்து, இடத்தை கூறுதல் ஆகிய செய்முறை தேர்வு நடந்தது.

2 டி.என்.காம்போசிட் தொழில்நுட்ப கம்பெனி, என்.சி.சி., ஆபிஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் தீபக் மேற்பார்வையில், 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்வை கண்காணித்தனர்.

இதேபோல், 2 டி.என்.பேட்டரிக்கான தேர்வு, சிங்காநல்லுார் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், 2 டி.என்.ஏர் ஸ்குவாட்க்கான தேர்வு ஸ்டேன்ஸ் பள்ளியிலும், 6 டி.என்., மருத்துவ பிரிவுக்கான தேர்வு, பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளியிலும் நடந்தன. மாணவியருக்கான தேர்வும் நடந்தது.

Advertisement