போதை பொருட்கள் பழக்கம் பெரும் சவால்; ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கோவை : கோவை மாவட்ட பள்ளிக்கல்வி துறையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 2023 - 24ம் ஆண்டில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விழாவில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
பள்ளியில், 100 சதவீதம் பெறுபது சுலபமான காரியம் இல்லை. மாணவர்கள் கல்வி கற்பதில், பல்வேறு சவால்கள் உள்ளன.
இன்று போதை பொருட்கள் பழக்கம் சவாலாக உள்ளது. இதை ஆசிரியர்கள் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்.
நமது பணிகளை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளவில்லை எனில், பின்தங்கி விடுவோம். நம்மிடம் அதிக திறன்மிக்க மனிதவளம் உள்ளது. கோவையில் உயர்வுக்கு படி திட்டத்தில் இதுவரை, பிளஸ் 2 முடித்த, 95 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். அதை, 100 சதவீதமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ரத்தினம் கல்விக்குழுமங்கள் தலைமை நிர்வாக அலுவலர் மாணிக்கம், தலைமை வணிக அலுவலர் நாகராஜ், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.