கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவமனையில் 18 பேர் மூளைச்சாவு
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், 2020 மற்றும் 2022- 2025 ஜன., மாதம் வரை 18 பேர் மூளைச்சாவு அடைந்துள்ளனர். இவர்களின் உடல் உறுப்புகள், தானம் செய்யப்பட்டதன் வாயிலாக, 56 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
மூளைச்சாவு என்பது, மூளைத்தண்டு செயல்பட முடியாமல் போகும் போது, ஒரு நபரால் மூச்சுவிட இயலாது. செயற்கை சுவாசம் அளிப்பதன் வாயிலாக, பிற உறுப்புகள் உயிரோடு சில மணி நேரம் வாழும்.
இதுபோன்ற சூழலில், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவைப்படுபவர்களின் உடலில் பொருத்தப்படுகிறது.
கோவை அரசு மருத்துமனையில், 2020ல் முதன்முறையாக ஒருவருக்கும், 2022ல் -3 பேர், 2023ல் 5 பேர், 2024ல் 8பேர், 2025 ஜன., மாதம் மட்டும் ஒருவர் உட்பட, 18 பேரின் உடல் உறுப்புகள் மூளைச்சாவு காரணமாக, தானம் செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில், 78 பேருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. இதில், உயிருடன் உள்ளவர்களிடம் 40, மூளைச்சாவு அடைந்த 38 பேரிடம் இருந்து தானமாக பெறப்பட்டது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
தமிழகத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதே சமயம், இன்றைய இளைஞர்கள் வாகனங்களை வேகமாக இயக்குவதும், ஹெல்மெட் இன்றி ஓட்டுவதுமே , விபத்து ஏற்பட காரணமாகிறது. விபத்தில், மூளைச்சாவு அதிகரிக்கவும் இதுவே காரணமாக அமைகிறது. மொத்த மூளைச்சாவு அடைபவர்களில், இதுபோன்ற விபத்துக்கள் வாயிலாக சிகிச்சைக்கு வருபவர்களே அதிகம்.
மூளைச்சாவை உடனடியாக யாரும் உறுதி செய்ய முடியாது. நோயாளி எந்த நிலையில் வந்தாலும், ஆறு மணி நேரம் உரிய சிகிச்சை அளித்த பின்னரே, மூளைச்சாவு என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
அதன்பின்னர் ஆறு மணி நேரம் கழித்தே, 'ஆப்னியா' என்னும் மூளைச்சாவு உறுதிசெய்யும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின், ஆறு மணி நேரம் கழித்து இரண்டாவது ஆப்னியா பிரிசோதனை செய்ய இயலும். இதற்கிடையில், பிற உறுப்புகளை செயல் இழக்காமல் வைக்க வேண்டியது, டாக்டர்களுக்கு சவாலான காரியம். இதன் பின்னரே, உறவுகளிடம் பேசி எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று, போலீசாருக்கு தெரிவித்து , உடல் உறுப்பு பெற்று, தேவைப்படுபவர்களுக்கு சீனியாரிட்டி படி அனுப்பப்படும்.
மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், 4-6 மணி நேரத்திற்குள்ளும், கல்லீரல் 12 மணி நேரத்திற்குள்ளும், சிறுநீரகம் 24 மணி நேரத்திற்குள்ளும், நுரையீரல் 6 மணி நேரத்திற்குள்ளும் பொருத்தி விடவேண்டியது அவசியம்.
கோவை அரசு மருத்துவமனையில், 2020 முதல் தற்போது வரை, மூளைச்சாவு அடைந்த, 18 பேரின் உடல் உறுப்புகள் வாயிலாக, 56 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
நோயாளி எந்த நிலையில் வந்தாலும், ஆறு மணி நேரம் உரிய சிகிச்சை அளித்த பின்னரே, மூளைச்சாவு என்பதை உறுதிபடுத்த வேண்டும். ஆறு மணி நேரம் கழித்தே, 'ஆப்னியா' என்னும் மூளைச்சாவு உறுதிசெய்யும் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பின், ஆறு மணி நேரம் கழித்து இரண்டாவது ஆப்னியா பரிசோதனை செய்ய இயலும்.
இன்றைய இளைஞர்கள் வாகனங்களை வேகமாக இயக்குவதும், ஹெல்மெட் இன்றி ஓட்டுவதுமே , விபத்து ஏற்பட காரணமாகிறது. விபத்தில், மூளைச்சாவு அதிகரிக்கவும் இதுவே காரணமாக அமைகிறது. மொத்த மூளைச்சாவு அடைபவர்களில், இதுபோன்ற விபத்துக்கள் வாயிலாக சிகிச்சைக்கு வருபவர்களே அதிகம்.