40 எம்.பி.,க்கள் இருந்தும் தமிழகத்திற்கான திட்டங்களை தி.மு.க., பெற்றுத்தரவில்லை: எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாடல்
ராமநாதபுரம் : -''நாற்பது எம்.பி.,க்கள் இருந்தும் தமிழகத்திற்கான திட்டங்கள் எதையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தரவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது,'' என, ராமநாதபுரத்தில் எதிர்கட்சி துணை தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரத்தில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் பங்கேற்க வந்த எதிர்கட்சி துணை தலைவர் உதயகுமார் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தென் தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில் எந்த அறிவிப்பும் இல்லை.
இது ஏமாற்றத்தை அளிக்கிறது. மத்திய பட்ஜெட் பீகாருக்கான பட்ஜெட் தவிர தமிழகத்திற்கு என எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் போலீசார் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை. பாலியல் தொடர்புடைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆளுங்கட்சி தரப்பில் தெரிவித்திருப்பது கண்துடைப்பு தான். த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்க விழாவை பொறுத்து தற்போது தான் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இனிமேல் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை பார்த்த பின்பு தான் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல முடியும் என்றார்.