கொடைக்கானலில் போலி எஸ்.ஐ.,
கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி வசூலில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ., துரைராஜை போலீசார் கைது செய்தனர்.
பச்சமலையான்கோட்டையைச் சேர்ந்தவர் துரைராஜ் 39. இவர் போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு சென்றார்.
சில ஆண்டுக்கு முன் சில்லறை மது விற்பனையில் ஈடுபட்ட செல்வம் மீது வழக்கு உள்ளதாகவும், எஸ்.பி., புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்ததாகவும் கூறினார். மேலும் வர மறுத்தால் அடித்து இழுத்துச் சென்று ஜெயிலில் அடைத்து விடுவேன் எனவும் மிரட்டினார்.
மேலும் மாதம் ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் எனவும் கூறினார். ஐந்தாண்டுகளாக திருந்தி வாழும் செல்வம் ரூ.5 ஆயிரம் ஏ.டி.எம்.,மில் எடுத்துக் கொடுப்பதாக பெருமாள்மலைக்கு அழைத்து வந்து அங்கு ஏ.டி.எம்., செயல்படாத நிலையில் கொடைக்கானல் சென்றார்.
துரைராஜ் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த செல்வம் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். போலி எஸ்.ஐ., துரைராஜை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.