பசுவின் சாணத்தில் பெயின்ட் தயாரிப்பு

- நமது நிருபர் -

சாணம் பல வகைகளில் பயன்படுகிறது. இது இயற்கை உரம், விபூதி, கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. சாணத்தில் நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் இருப்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.

சாணத்தை வீட்டு வாசலில் தெளிப்பதால், வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது, சாணத்தை மிதித்து செல்வதால், காலில் உள்ள விஷ கிருமிகள் கொல்லப்படுகின்றன.

இத்தகைய சாணத்தின் மகிமை கிராமப்புறங்களில் இப்போது காண முடிகிறது. ஆனால், இதே சாணத்தை வைத்து, பெயின்ட் தயாரிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஆம்... தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் ஹலேயங்காடி கிராமத்தில், சாணத்தால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பெயின்ட் பிரபலமாகி வருகிறது. 'சன்னிதி பிரகிருதிக்' என்று முத்திரை குத்தப்பட்ட இந்த பெயின்ட், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

ராஜஸ்தான்



சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் மொத்த ஆர்டர்களை உரிமையாளர் பெற உதவுகிறது.

இது குறித்து இதன் உரிமையாளர் அக் ஷதா கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள கே.என்.எச்.பி.ஐ., எனும் குமரப்பா நேஷனல் ஹேண்ட்மேட் பேப்பர் இன்ஸ்டிடியூட்டில் நடந்த தொழில் முனைவோர் பயிற்சி முகாமில் பங்கேற்றேன். அதன்பின், 2022ல் 25 லட்சம் ரூபாய் முதலீட்டில், சாணத்தில் பெயின்ட் தயாரிக்கும் யூனிட்டை துவக்கினேன்.

சாணத்தில் பெயின்ட் தயாரிக்க சாணம் தேவைப்படுகிறது. எனவே, எங்கள் கிராமத்தில், அண்டை கிராமங்களில் கால்நடை வைத்திருப்பவர்களிடம் கிலோ ஐந்து ரூபாய்க்கு சாணத்தை வாங்கி வருகிறோம்.

இயற்கை தொடர்பான கண்காட்சிகள் எங்கு நடந்தாலும், அங்கு ஸ்டால் அமைத்து, பொது மக்களிடம், பசுவின் சாணத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

வழக்கமாக சாணத்தில் இருந்து வரும் வாசனை பெரும்பாலானோருக்கு பிடிக்காது. இதை எப்படி வீட்டில் பெயின்டாக பூச முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு தான், நாங்கள் ஸ்டாலில் வைத்துள்ள எல்.இ.டி., திரையில், எப்படி பெயின்ட் தயாரிக்கப்படுகிறது. இதை பெயின்டாக மாற்றும் போது, சாணத்தின் வாசனை இருக்காது. ஆனால், ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் என்பதை விளக்குவோம்.

குளிர்ச்சி



வாடிக்கையாளர்கள் கேட்கும் நிறத்தில் பெயின்ட் தயாரித்து தரப்படும். வண்ணங்கள் கூட இயற்கை முறையில் தயாரானவற்றையே பயன்படுத்துகிறோம்.

இந்த பெயின்ட், வெப்ப இன்சுலேட்டராக செயல்படுவதுடன், கதிர்வீச்சை தடுக்கிறது. இதனால், கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

எங்கள் தயாரிப்பை மக்களிடம் சேர்க்க, முதலில் இப்பகுதியில் உள்ள கோவில்கள், வீடுகளில் இலவசமாக இந்த பெயின்ட் பூசினோம். சில நாட்களில் எங்களை தொடர்பு கொண்ட அவர்கள், 'பெயின்ட பூசிய பின்னர், வீட்டில் வெப்பம் குறைந்துள்ளது' என்று தெரிவித்தனர்.

தற்போது எங்கள் தயாரிப்பு குறித்து அறிந்த பலரும், எங்களை தொடர்பு கொள்கின்றனர். கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பெயின்ட் கேட்டு வருகின்றனர்.

பெயின்ட் தயாரிப்புக்கான இயந்திரங்களை, தமிழகத்தின் கோவையில் இருந்து வாங்கி வந்தோம். ஜி.எஸ்.டி., சேர்த்து, 1 லிட்டர் பெயின்ட் 190 ரூபாய்க்கு விற்கிறோம். மேலும் விபரங்களுக்கு 90084 85626 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

� பசு சாணத்தில் தயாரிக்கப்பட்ட பெயின்டுடன் அக் ஷதா. � பெயின்ட் தயாரிப்பு இயந்திரம்.

Advertisement