பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணமாம்; கழிப்பறைக்கு ஐந்து ரூபாய் கட்டணமாம்!

கோவை : கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில், பெண் பயணிகளுக்கு இலவச கழிப்பறை வசதியில்லை. வெளிப்புறத்தில் உள்ள, 'நம்ம டாய்லெட்' மற்றும் அருகாமையில் உள்ள சிறுநீர் கழிப்பறை, உபயோகத்தில் இல்லை. இதனால் பெண்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.


கோவை, காந்திபுரத்தில் டவுன் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதிவிரைவு பஸ் ஸ்டாண்ட் உள்ளது. டவுன் பஸ் ஸ்டாண்ட்டை, தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர்.


இவர்களுக்கு, கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டியது மிக முக்கியம். இதற்கேற்ப பஸ் நுழையும் பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் கட்டண முறை கழிப்பறை மற்றும் குளியலறை வசதி, மாநகராட்சியால் செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோல், போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கழிப்பறையும், கட்டண முறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

பஸ்சில் இருந்து இறங்கியதும், பயன்படுத்தும் வகையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள், பயணிகளுக்கு இலவச கழிப்பறை வசதி செய்து கொடுக்கவில்லை.

பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியே, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில், ஆண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் சிறுநீர் கழிப்பறை இருக்கிறது; அதுவும், பராமரிப்பு காரணம் கூறி, மூடப்பட்டிருக்கிறது.

அதன் அருகாமையில், 'நம்ம டாய்லெட்' கட்டமைப்பு உள்ளது; தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாட்டில் இல்லை. சிறுநீர் கழிப்பிடம் பயன்படுத்த முடியாததால், 'நம்ம டாய்லெட்'டுக்குள் ஆண்கள் சென்று, சிறுநீர் கழிக்கின்றனர். பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.

பெண் பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், எந்தவொரு இடத்திலும் இலவச கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை, கட்டண கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அங்கு, ஒரு நபருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். பெண்கள் பஸ்சில் பயணிப்பதற்கு இலவச வசதி செய்து கொடுத்துள்ளது தமிழக அரசு.

ஆனால், மிக முக்கிய தேவையான கழிப்பறையை பயன்படுத்த, ஒருவருக்கு மாநகராட்சி நிர்வாகம் ஐந்து ரூபாய் வசூலிக்கிறது. இது, பெண் பயணிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், எந்தவொரு இடத்திலும் இலவச கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை, கட்டண கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது, பெண் பயணிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement