உழவர் சந்தை பகுதி மேம்படுத்தப்படும்: தி.மு.க., வேட்பாளர் உறுதியளிப்பு

ஈரோடு: -ஈரோடு கிழக்கு தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் வழிகாட்டுதல்படி, நேற்று ஈரோடு சம்பத் நகர், உழவர் சந்தை பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது: .மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை மூலம், விளைவித்த காய்கறி, பழங்களை விவசாயிகளே நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யும் வாய்ப்பை, முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கி தந்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலினும், பல ஊர்களில் உழவர் சந்தையை விரிவுபடுத்தி உள்ளார். உழவர் சந்தையை மேம்படுத்தவும், கூடுதல் வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சம்பத் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பல்வேறு, 'பிளாக்குகள்' பழுதடைந்ததால் அகற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில் புதிய குடியிருப்புகள் விரைவில் அமைக்கப்படும். கலெக்டர் அலுவலகம் முன் ரவுண்டானாவுடன், சாலை விரிவாக்கத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி நிறைவடைந்தவுடன், போக்குவரத்து சீராகும். ஈரோடு பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ரவுண்டானா முதல் பெருந்துறை சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை பகுதியில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பின்றி உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிகள் தொடர, தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர் செல்லபொன்னி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement