வாங்க சிரிக்கலாம் நிகழ்ச்சியில் 'கல கல'
கோவை,: கோவை நகைச்சுவை சங்கத்தின், 21வது நிகழ்ச்சி நவ இந்தியா இந்துஸ்தான் கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது.
கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், 'ஏனுங்க... வாங்க சிரிக்கலாம்' என்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், ''நான் பார்த்த மனிதர்கள் பலர் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது போல் வாழ்ந்துள்ளனர். உதாரணத்திற்கு, நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஜனாதிபதி ஆன பின்னர், அவரின் உறவினர்கள் அவரை சந்திக்க டில்லிக்கு சென்ற போது தனது சொந்த பணத்தில், டில்லியை சுற்றிக்காட்டினார். எந்த இடத்திலும் எளிமையை விட்டுக்கொடுக்காத மனிதர். திருக்குறளில் இருப்பதை படித்து, அதன் பொருளை புரிந்து கொண்டால், நம்மை போல் நல்ல மனிதர்கள் இருக்க முடியாது,'' என்றார்.
நிகழ்ச்சியில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, கோவை நகைச்சுவை சங்க செயலாளர் தனபால், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.