லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இன்று வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்
புதுடில்லி: லோக்சபா துவங்கியதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று (பிப்.,03) லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 31ம் தேதி துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் பிப்.,3ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (பிப்.,03) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. அவை கூடியதும் மஹா கும்பமேளா உயிரிழப்புகள் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.
ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் இந்த விவகாரத்தை எழுப்பலாம் என சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர். 'கேள்வி நேரம் நடைபெறாமல் எதிர்கட்சிகள் இடையூறு ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
மசோதா
திருத்தப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு, பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கோரியிருந்த திருத்தங்கள் அனைத்தையும் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மை அடிப்படையில் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டது. இந்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ராஜ்யசபா
அதேபோல், காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அவை கூடியது மறைந்த முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை நடந்து வருகிறது.