கேரள மருத்துவ கழிவு ஏற்றி வந்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு: ஐகோர்ட் கிளை அதிரடி
மதுரை: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, ஏலம் விட நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு படி, கேரளா அதிகாரிகள் லாரி உடன் வந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி சென்றனர். இதற்கிடையே, மருத்துவ கழிவு ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (பிப்.,03) ஐகோர்ட் மதுரைக்கிளை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
* மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது.
* அண்டை மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவை தமிழகத்தில் கொட்டுவது தீவிரமான குற்றமாகும்.
* இதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, ஏலம் விட நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. பின்னர், மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.