மணிப்பூர் சம்பவம்; முதல்வரின் ஆடியோ குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
புதுடில்லி: மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக முதல்வர் பைரன் சிங்கின் உரையாடல் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் துவங்கி, இரு தரப்புக்கும் இடையே மோதல்கள், வன்முறைகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைக்கு முதல்வர் பைரன் சிங் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் குகி அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள், சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் பைரன் சிங் உரையாடல் குறித்த ஆடியோ டேப்புகளின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.