விமான நிறுவனங்களுக்கு போலி மிரட்டல் விடுத்த 13 பேர் கைது!
புதுடில்லி: விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, கடந்த ஆண்டில் 13 பேர் கைது செய்யப்பட்டனர் என்று ராஜ்யசபாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் விமான நிறுவனங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் குறித்து, எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்து முரளிதர் மொஹோல் கூறியதாவது:
கடந்த ஆண்டு, விமான நிறுவனங்களுக்கு மொத்தம் 728 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அவற்றில் 714 உள்நாட்டு விமானங்கள் அடங்கும்.
2024ம் ஆண்டில், விமான நிறுவனங்களுக்கு போலி குண்டு அச்சுறுத்தல்களை விடுத்ததற்காக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தவும், விமான சேவைகளை சீர்குலைக்கவும், பாதுகாப்பு செலவுகளை ஏற்படுத்தவும் காரணமாகலாம் என்பதால், இத்தகைய மிரட்டல்கள் மிகவும் கடுமையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
போலி அச்சுறுத்தல்கள் பொது பாதுகாப்பை அச்சுறுத்துவதோடு, சட்ட அமலாக்க வளங்களை மிகுந்த அளவில் பயன்படுத்த வேண்டியதாகிறது.
இதன் காரணமாக, குற்றம் செய்தவர்கள் கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றனர், இதில் சிறைத்தண்டனை மற்றும் அதிக அளவு அபராதம் ஆகியவை அடங்கும். அதிகாரிகள் பொதுவாக மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் தடயவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றம் செய்தவர்களை கண்டறிந்து கைது செய்கின்றனர்.
இவ்வாறு முரளிதர் மொஹோல் கூறினார்.