தொடர் நிலநடுக்கம்: கிரீஸ் தீவில் பள்ளிகள் மூடல்
சாண்டோரினி: பிரபலமான கிரீஸின் சுற்றுலா தீவான சாண்டோரினியில் 200க்கும் மேற்பட்ட சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
கிரீஸ் நாட்டின் பிரபல சுற்றுலா மையமாக இருப்பது சாண்டோரினி தீவு. இங்கு வார இறுதியில் 200க்கும் மேற்பட்ட சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகின. அதை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
தீவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவாகக்கூடும் என்ற கவலை பலருக்கும் ஏற்பட்டதை தொடர்ந்து அவசரகால குழுக்களை கிரீஸ் அரசு ஏற்பாடு செய்தது.
பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ் கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் மற்றும் திங்கள் கிழமை வரை தொடர்ந்த நிலநடுக்கங்களின் அதிர்வெண், குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் கவலையடையச் செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், குடிமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அமைதி படுத்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தீவின் முக்கிய நகரமான பிராவில், எந்த நேரத்திலும் பாதுகாப்பான இடத்துக்கு மக்களை வெளியேற்ற தயாராக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
நிபுணர்கள் எச்சரிக்கை:
4.5 ரிக்டர் அளவுக்கு மேல் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் சாண்டோரினியின் எரிமலையுடன் தொடர்புடையவை அல்ல என்று அரசு கூறியுள்ள நிலையில், சில நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், எரிமலை இயக்கத்திற்கான ஏதேனும் அறிகுறி உள்ளதா அல்லது அது இப்பகுதியில் வழக்கமான நிலத்தட்டு அதிர்வு செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.