லாரி மோதி ஆசிரியர் பலி விபத்தை கண்டித்து மறியல்

மீஞ்சூர்,
கும்மிடிப்பூண்டி அடுத்த, தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன்,44; இவர், மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், தற்காலிக கணினி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை, பள்ளி செல்வதற்காக, 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி'யில், வல்லுார் - காட்டுப்பள்ளி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

எண்ணுார் காமராஜர் துறைமுகம் அருகே சரக்கு ஏற்றி வந்த, 'அசோக் லேலாண்ட்' லாரி மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே அரசன்உயிரிழந்தார்.

அதையடுத்து கிராமவாசிகள், சாலையில் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாகவும், அதிக சுமையுடன் கனரகவாகனங்கள் பயணிப் பதால், தொடர் விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மீஞ்சூர் போலீசார் உறுதியளித்தனர். அதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதித்தது.

செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்தில் இறந்த ஆசிரியர் அரசனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

விபத்து ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த லாரி டிரைவர், நாராயணன், 31, என்பவரை பிடித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement