போலி நகை அடகு வைக்க முயன்ற வடமாநில நபர் கைது
சென்னை, மதுரவாயல் ஏரிக்கரை, கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் பர்வின் குமாவத், 32. இவர், தன் வீட்டு வளாகத்தில் 'கிருஷ்ணாஅடகு கடை' நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், நேற்று முன்தினம் காலை தங்க மோதிரம் அடகு வைக்க வந்துள்ளார்.
பர்வின் குமாவத் அதை சோதனை செய்து பார்த்தபோது, அது போலி என்பது தெரியவந்தது.
சுதாரித்தவர், சம்பந்தப்பட்ட நபரை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி விட்டு, அவருக்கு தெரியாமல் தன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து, அந்த நபரை பிடித்து, மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஆதில் உசேன், 40, என, தெரிந்தது. இவர், தங்க முலாம் பூசப்பட்ட மோதிரத்தை, தங்க மோதிரம் எனக்கூறி அடகு வைத்து மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, உசேனை போலீசார் கைதுசெய்தனர்.