வேங்கைவயல் வழக்கு; நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், வேங்கைவயல் வழக்கு, வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில், அதே பகுதியை சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுகுறித்து, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
அதை ஏற்க கூடாது என வழக்கின் புகார்தாரர் கனகராஜ் என்பவர், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுபோல, அந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று அந்த மனுக்கள் மீது விசாரணை நடந்தது. இருதரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். பொறுப்பு நீதிபதி வசந்தி தீர்ப்பு வழங்கினர். அதில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் கோரிக்கையை ஏற்று, வழக்கை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.