தீ வைத்து என்னை கொல்ல சதி கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் பகீர்

சென்னை : போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான தேர்வில் குளறுபடி நடந்துள்ளதை வெளிப்படுத்திய நிலையில், தன் அறைக்கு தீ வைத்து கொல்ல சதி நடந்துள்ளதாக, கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் புகார் அளித்துள்ளார்.


ஆந்திர மாநிலம் கர்நுால் பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா நாயக், 51. தமிழக காவல் துறையின், 1998ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்.

தீ விபத்து



இதற்கு முன், காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்யும் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக பணியாற்றி வந்தார்.

கடந்தாண்டு, ஜூலை 28ம் தேதி, கல்பனா நாயக் அறையில், மின் கசிவு காரணமாக, குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விபத்து நடப்பதற்கு முன், 2023ல், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மற்றும் நிலைய அலுவலர் என, 750 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்கு ஒன்றில், கல்பனா நாயக் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், 'மதிப்பெண்கள் பெற்று தகுதி இருந்தும், இட ஒதுக்கீடுகளில் சேர வேண்டியவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதனால், குளறுபடி ஏற்படுத்தப்பட்டு உள்ளது' என, கல்பனா நாயக் அம்பலப்படுத்தி இருந்தார்.

அதுபற்றி, உள்துறை மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கும் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அவரது அறையில் தீ விபத்து நடந்துள்ளது, அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த மறுநாளே, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை சந்தித்து, தீ விபத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துஉள்ளார்.

புகார் அனுப்பினார்



அதன்பின், 2024, ஆகஸ்ட், 14ல், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் வாயிலாக புகார் அனுப்பி உள்ளார்.

அதில், 'மின்கசிவு காரணமாக, என் அறையில் தீ விபத்து நடந்ததாகக் கூறுவதை, என்னால் நம்ப முடியவில்லை. நான் மட்டும் அலுவலகத்தில் இருந்து இருந்தால், இந்நேரம் என்னை உயிருடன் நீங்கள் பார்த்து இருக்க முடியாது.

'என்னை கொல்ல சதி நடந்து இருப்பதாக சந்தேகிக்கிறேன். அதுபற்றி சட்ட ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, கூறியுள்ளார்.

எஸ்.ஐ., தேர்வில் குளறுபடி நடந்து இருப்பதை அம்பலப்படுத்திய நிலையில், என்னை கொலை செய்ய சதி நடந்து இருப்பதாக, கூடுதல் டி.ஜி.பி., ரேங்கில் இருக்கும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்த விபரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி.ஜி.பி., விளக்கம்



கல்பனா நாயக் புகார் குறித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினரும், கூடுதல் டி.ஜி.பி.,யுமான கல்பனா நாயக்கிடம் இருந்து, 2024 ஆக., 14ல் கடிதம் பெறப்பட்டது.

அதில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் உள்ள அவரது அறையில், ஜூலை 28ல், தீ விபத்து நடந்துள்ளது.

அதில், சட்ட விரோத செயல்கள் மற்றும் நாசவேலை நடந்து இருப்பதாக சந்தேகப்படுவதாகவும், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, கல்பனா நாயக் கடிதம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது. சம்பவம் தொடர்பாக, எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி துணை கமிஷனர், தடயவியல் நிபுணர்கள், மின் வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி கழக அதிகாரிகள் மற்றும் புளூ ஸ்டார் நிறுவன தொழில்நுட்ப வல்லு நர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விரிவான விசாரணை நடத்தினர்.

அதன்பின் இந்த வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக, அவர், 31 பேரிடம் விசாரித்து

தொடர்ச்சி 7ம் பக்கம்

தீ வைத்து என்னை கொல்ல சதி

முதல் பக்கத் தொடர்ச்சி

வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய, தடயவியல் நிபுணர்கள், மின் வாரிய நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டது.

தற்போது, அவர்களின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில், செப்பு கம்பிகளில் மின் கசிவு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதேனும் எரியக்கூடிய பொருட்கள் இல்லை என, கண்டறியப்பட்டு இருப்பதாக, தடயவியல் நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வேண்டுமென்றே தீ வைப்பு சம்பவம் நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது. அத்துடன், கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் உயிருக்கு திட்டமிட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் நிரூபணமாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement