போக்சோ வழக்கில் கைதான 'யுடியூப்பர்கள்' ஜாமின் கோரி மனு
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் 2 சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான 'யுடியூப்பர்கள்' சித்ரா, திவ்யா, கீழக்கரை கார்த்திக், வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ஆனந்த ராமன் ஆகியோர் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் மீனாட்சி கொடுத்த புகாரில், இவர்கள் 4 பேர் மீதும் ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் 6 பிரிவுகளில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 4 பேர் தரப்பில் ஜாமின் கோரி போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் சித்ராவின் மனுவின் மீதான விசாரணை பிப். 7க்கு ஒத்தி வைக்கப்பட்டது. மற்றவர்களின் மனு மீதான விசாரணை இன்று(பிப்.4) நடக்கிறது.
திவ்யா கார்த்திக் தரப்பு வழக்கறிஞர் கோட்டிமுத்து கூறியதாவது: இந்த பிரச்னைக்கு சித்ராவின் திட்டமிட்ட சதிதான் காரணம்.
தற்போது போலீசார் பதிவு செய்துள்ள புகாருக்கும், வீடியோ காட்சிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். திவ்யா, கார்த்திக் குறித்து அவதூறு கூறும் யூடியூப்பர்கள் மீது வழக்கு தொடரப்படும், என்றார்.