தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி; மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

சென்னை: மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு, 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், புதிய பாதை பணிகளுக்கு இதுவரை, 25 சதவீத நிலமே கிடைத்து உள்ளதாகவும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

டில்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று அவர் அளித்த பேட்டி:

மத்திய பட்ஜெட்டில், ரயில்வேயில் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த, 1.16 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில், பழைய ரயில் பாதைகள் அனைத்தும் மாற்றப்படும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 'நமோ பாரத்' ரயில்களும், 100 'அம்ரித் பாரத்' ரயில்களும், 200 'வந்தே பாரத்' ரயில்களும் இயக்க, பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1,000 பாலங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. 200 கி.மீ., துாரத்திற்குள் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே, 'நமோ பாரத்' ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009 - 14ம் ஆண்டுகளில், 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது, 7.5 மடங்கு அதிகம்.

இதற்கு முந்தைய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு, 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2014 முதல் இதுவரை, 2,242 கி.மீ., துார ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. மேலும், 22 ரயில் பாதை திட்டங்கள், 33,467 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன.

இதுதவிர, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஐந்து ரயில் நிலையங்களில், 1,896 கோடி ரூபாய் செலவில், சர்வதேச தரத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 77 ரயில் நிலையங்கள், 2,948 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது, எட்டு, 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் நடக்கும் திட்டங்களுக்கு, 3,389 ஹெக்டேர் நிலம் தேவை. இதுவரை, 25 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே, ரயில் பாதை திட்டங்களை விரைந்து முடிக்க, மாநில அரசின் ஆதரவு தேவை. தனுஷ்கோடி -- ராமேஸ்வரம் ரயில் பாதை திட்டத்தை, தமிழக அரசு வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு அதை கைவிடவில்லை.

கடந்த ஆண்டில், 1,200 முன்பதிவு இல்லாத பெட்டிகள் தயாரித்து, ரயில்களில் இணைத்து இயக்கப்படுகின்றன. அடுத்த சில ஆண்டுகளில், 14,000 முன்பதிவு இல்லாத பெட்டிகளை தயாரித்து, படிப்படியாக இணைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



1,460 கி.மீ, துாரத்துக்கு

'கவச்' தொழில்நுட்பம்தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியதாவது: பயணியர் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில், கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரை - எழும்பூர் இடையே, நான்காவது புதிய ரயில் பாதை பணி, அடுத்த இரண்டு மாதங்களில் முடியும். மேலும், 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில், 50 சதவீத பணிகளை, இந்த நிதி ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகத்திலும், 'நமோ பாரத்' ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெற்கு ரயில்வேயில், ரயில் விபத்துகளை தவிர்க்க, 1460 கி.மீ., துாரம், 'கவச்' தொழில்நுட்பம் நிறுவ திட்டமிட்டப்பட்டது. முதற்கட்டமாக, 601 கி.மீ., துாரம் நிறுவ, 'டெண்டர்' வெளியிட்டு, பணிகள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உடனிருந்தார்.பாம்பன் பாலத்தை மோடி திறந்து வைப்பார்ராமேஸ்வரம் பாம்பன் பாலப்பணிகள் முழுதும் நிறைவடைந்து விட்டன. பாம்பன் பாலத்துக்கான அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையம் எழுப்பிய சந்தேகங்களுக்கு, நாட்டின் முதலாவது செங்குத்தான துாக்கு கடல் பாலம் எனவும், நாட்டின் தனித்துவமான பாலம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைப்பார். திறப்பு விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Advertisement