கண்டக்டரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவன்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு அரசு பஸ்சில் பயணித்தார். குடிபோதையில் இருந்த சிறுவன் படிக்கட்டில் நின்று கொண்டு கண்டக்டரை அவதூறாக பேசி தகராறு செய்தார்.

எனவே கண்டக்டர் சிறுவனை பாவூர்சத்திரத்தில் இறக்கி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அந்த பஸ் திருநெல்வேலி சென்று திரும்பி வரும் வரை பாவூர்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.

ஆனால் பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மற்றொரு அரசு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்ததும், தாம் வந்த பஸ் என நினைத்து அதில் ஏறி கண்டக்டரை மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் குத்தினார். இதில் கண்டக்டர் மாடசாமி 50, தப்பித்தார். இருப்பினும் அவரது இடது காதில் கத்தி குத்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement