மானுார் பஸ் கொள்ளையை கண்டுபிடிக்க உதவிய, 'டெய்லர் மார்க்!'
என், 34 ஆண்டுகால காவல் துறை அனுபவத்தில், நிறைய குற்றச் சம்பவங்களில், ஒரு சிறு தடயம்கூட அந்தந்த வழக்கை கண்டுபிடிப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். அப்படிப்பட்ட ஒரு குற்றச் சம்பவத்தைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். கடந்த, 1995... திருநெல்வேலி நகர துணை கண்காணிப்பாளராக நான் பணியிலிருந்தேன்.
இப்பகுதிக்குள், 12 காவல் நிலையங்கள் இருந்தன. அதில், திருநெல்வேலி - சங்கரன்கோவில் மார்க்கத்தில், 18 கி.மீ., தொலைவில் மானுார் காவல் நிலையம் உள்ளது.
நவம்பர் 1ம் தேதி மாலை, அந்த காவல் நிலையம் சென்று, பதிவேடுகளை நான் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இவ்வாறு காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்வது காவல் துறையில் உள்ள மரபு.
தடயங்கள்
இரவு, 8:50 மணிக்கு, ஒரு பஸ் ஓட்டுநரும், நடத்துநரும் பதைபதைப்புடன் காவல் நிலையம் வந்தனர்.
பள்ளிக்கோட்டை கால்வாய் பாலத்தின் அருகே, 8:40 மணிக்கு, 12 பேர் கும்பல், சாலையில் முட்களை போட்டு பஸ்சை மறித்து, வீச்சரிவாள் மற்றும் கம்புகளை கொண்டு பஸ்சின் கண்ணாடியை உடைத்து, பஸ்சிலிருந்த பயணியரை மிரட்டி, அவர்கள் வைத்திருந்த பணம், நகைகள் மற்றும் நடத்துநரின் கலெக் ஷன் பணம் என, மொத்தம் 25,000 ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக புகார் செய்தனர்.
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், காவல் நிலைய ஆய்வாளர் கதிரேசன், சில காவலர்கள், பஸ் ஓட்டுநர், நடத்துநர், வந்திருந்த பயணியர் சகிதமாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றேன். சம்பவ இடம், ஆள் நடமாட்டம் இல்லாத மிகவும் இருட்டான பகுதி. கூடியிருந்தவர்களை விசாரித்த போது, கொள்ளை அடித்த கும்பல், அருகிலிருந்த ஓர் ஓடை வழியாக இருட்டில் தப்பிச் சென்று விட்டதாக கூறினர்.
அந்த கொள்ளையர்கள், சட்டை மற்றும் துண்டுகளை, முண்டாசு போல கட்டி, தங்கள் முகத்தை மறைத்திருந்தனர் என்றும் தெரிவித்தனர்.
உடனே, அந்த ஓடைக்குள் இறங்கிச் சென்று, ஜீப்பின் விளக்கு மற்றும் டார்ச் லைட் உதவியுடன், ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என, காவலர்களிடம் தேடச்சொன்னேன். திறந்தவெளி, இரவு நேரமானதால், சூரைக்காற்று மிக வேகமாக வீசியபடி இருந்தது.
புலன் விசாரணை
அந்த ஓடையில், புதிய சட்டை ஒன்று, ஒரு செடியின் மேல், பட்டும்படாமலும் சிக்கியபடி, எப்போது பறக்கலாமென ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்தச் சட்டையை எடுத்து பார்த்த போது, 'முரளி டெய்லர்' என்ற மார்க்குடன் இருந்தது.
அதை வைத்து அந்த டெய்லரை, பக்கத்து கிராமத்தில் கண்டுபிடித்து விசாரித்து, பிறகு அந்த கொள்ளை கும்பலை சேர்ந்த, 12 பேரையும், இரண்டே நாட்களுக்குள் கைது செய்து, கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் மற்றும் இதர சொத்துக்களை மீட்டோம்.
இந்தச் சம்பவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம், ஒருவேளை, வழக்கம் போல புகாரைப் பெற்றுக் கொண்டு புலன் விசாரணைக்கு சாவகாசமாக செல்லலாம் என்று சற்று தாமதித்து இருந்தாலும், இந்த வழக்கின் புலன் விசாரணையில் முக்கிய தடயமாகவும், துருப்புச் சீட்டாகவும் இருந்த அந்த சட்டை, சூரைக்காற்றில் அடித்து, எங்கோ பறந்து போயிருக்கலாம்.
இந்த வழக்கும், கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டு, காவல் நிலைய பதிவேடுகள் பராமரிப்பு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும்.
சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல, ஒரு சிறிய டெய்லர் மார்க், பெரிய கொள்ளை வழக்கை கண்டுபிடிக்க உதவும் என்பதை, காவல் பயிற்சியின்போது படித்த நான், என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்; நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
இது, எதனால் சாத்தியமானது... 'புலன் விசாரணையில் பொன்னான நேரம் முக்கியம்' என்ற தாரக மந்திரத்தை மறக்காமல் பயன்படுத்திய காரணத்தால் அல்லவா!
ஆர்.சின்னராஜ்
காவல் துறை துணை ஆணையர் (ஓய்வு)
rc.chinnaraj@gmail.com