கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி வளர்ச்சி பாதிப்பு: உயர்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படுமா

புதுச்சேரி: அரசு கல்லுாரிகள் அனைத்தும் வேகமாக வளர்ச்சியை எட்டிக்கொண்டு இருக்க கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மட்டும் தேய்பிறையாகி வருகின்றது. முதல்வர் அறிவித்தபடி இந்த கல்லுாரியை உயர்கல்வி துறையின் கீழ் அரசு கொண்டு வரும் பணியை வேகப்படுத்த வேண்டும்.

]புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை கீழ் இயங்கும் கூட்டுறவு பி.எட்., கல்லூரி, கடந்த 2005-06 கல்வியாண்டில் 100 மாணவர்களுடன் துவங்கப்பட்டது. இங்கு படிக்க மாணவ மாணவிகளிடம் ஒவ்வொரு ஆண்டும் கடும் போட்டி ஏற்படும். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. இந்த கல்லுாரியின் அடுத்த கட்டத்திற்கு நகராமல் அப்படியே நிற்கின்றது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 2014 புதிய விதிகளின்படி, போதிய கட்டமைப்பு, கூடுதல் பேராசிரியர்கள் நியமனம் இல்லாததால் , மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் குறைந்தது. தற்போது ஆண்டிற்கு 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கல்லுாரிக்கு போதிய இடவசதி இல்லாததால் 2021ம் ஆண்டு இக்கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கூத்தும் நடந்தது.

முதல்வர் தலையிட்டதால் கண்டாக்டர் தோட்டத்தில் உள்ள திரு.வி.க அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டட வளாகத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. இதனால் தேசிய கல்வி குழுமம் அங்கீகாரம் இக்கல்லூரிக்கு திரும்ப கிடைத்தது.

அதன்பின்னர் கூட சுதாரித்து கொண்டு கல்லுாரியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவில்லை.

இந்த கல்லுாரியை உயர் கல்வி துறையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்த சூழ்நிலையில், கடந்த 2022-23 பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அனைத்து கல்லூரிகளை போல கூட்டுறவு கல்வியியல் கல்லூரியும் அரசு கல்லூரி ஆக மாற்றப்பட்டு புதுச்சேரி அரசு உயர்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கான கோப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2022ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. ஆனால் இந்த கோப்பு மீது எந்த முடிவுக்கும் இதுவரை வரவில்லை. கல்லூரி உயர்கல்வித்துறை இடம் இணைப்பதற்கான எந்த வித அரசாணையும் வெளியிடப்படவில்லை.

கூட்டுறவு கல்லுாரிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட அரசு கல்லுாரிகள் அனைத்தும் அசுர வளர்ச்சியை எட்டி இருக்க இக்கல்லூரியோ தேய்பிறையாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வெறும் பத்து பேராசிரியர்கள் மற்றும் ஏழு அலுவலக ஊழியர்கள் மற்றும் 200 மாணவர்கள் பயிலும் இக்கல்லூரியை தனி கவனம் செலுத்தி உடனடியாக காப்பாற்றிட வேண்டும்.

இங்கு படிக்க பலத்த போட்டி உள்ள சூழ்நிலையில் பி.எட்., சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். உயர் கல்வி துறையின் கீழ் கூட்டுறவு கல்வியியல் துறையை கொண்டு வந்து, போதுமான நிதியை ஒதுக்கி கல்லுாரியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நெருக்கடியில் பேராசிரியர்கள்

கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த 15 மாதமாக சம்பளம் இல்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு காலத்தோடு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் மனம் குமுறி வருகின்றனர்.

Advertisement