சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு உந்துவிசையாக உள்ளது மத்திய பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு
புதுச்சேரி: நாட்டின் உற்பத்தி மற்றும் தொழில்துறையில் பெரும் வளர்ச்சியை கொண்டுவரும் வகையில், புது யுக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி கிளை தலைவர் சண்முகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு சமர்பித்துள்ள பட்ஜெட்டினை வரவேற்கின்றோம். இந்த பட்ஜெட் உற்பத்தி துறையை வலுப்படுத்துவதோடு, வரி விதிமுறைகள், மின்சார துறை, நகர அபிவிருத்தி, சுரங்கத் துறை, நிதி துறை மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் ஆகிய ஆறு முக்கிய துறைகளில் விரிவான மறுசீரமைப்புகளை கொண்டு வந்துள்ளது.
குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் இரண்டாவது வளர்ச்சி இன்ஜினாக கருதப்படும் நிலையில், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் வரம்பு 5 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்கப்படும்.
மேலும், 5 லட்சம் வரம்புடன் சிறு தொழில்களுக்கு தனிப்பட்ட கடன் அட்டை திட்டம் அறிமுகமாகிறது. ஏற்றுமதி செய்யும் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் 20 கோடி ரூபாய் வரை காலக்கெடுவான கடனைப் பெறலாம்.
இத்துடன், லித்தியம் அயான் பேட்டரி உற்பத்திக்கு உதவியாக அரசு சிறப்பு ஆதரவு வழங்கவுள்ளது.
இது இறக்குமதி மீதான சார்பினை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை உறுதி செய்யும்.
மத்திய பட்ஜெட் மூலம் உள்நாட்டு உற்பத்தி, சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி, மற்றும் ஏற்றுமதிக்கு புதிய உந்துவிசை கிடைத்துள்ளது.
இது மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்தே செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு சமர்பித்துள்ள பட்ஜெட் நாட்டின் உற்பத்தி மற்றும் தொழில்துறையில் பெரும் வளர்ச்சியை கொண்டுவரும் வகையில், புது யுக பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.