கல்லுாரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி: கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரி: கல்லுாரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் பயிலும் ஏழை எளிய மாணவிகளுக்காக, கடந்த 2019ம் ஆண்டு முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் மதிய உணவு திட்டம் துவங்கப்பட்டது. இதில், 350 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
கல்லுாரி புனரமைப்பு பணிக்காக கேண்டீன் மூடப்பட்டது. இதனால் காலை ஷிப்ட் கல்லுாரிக்கு வரும் கிராமப்புற மாணவிகள் உணவின்றி படிக்கும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த முன்னாள் மாணவிகள் சங்கம், முதற்கட்டமாக 100 மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்தது. இத்திட்டம் துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.
கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது; பாரதிதாசன் கல்லுாரிக்கு தேவையான வசதிகள் குறித்து ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வகுப்பறை, உள்விளையாட்டு அரங்கம், கருத்தரங்கு கூடம், உணவகம் கட்டி தர வேண்டும். பழைய கட்டடத்தை சீரமைக்க வேண்டும் எனது எண்ணம். முதல் கட்டமாக கல்லுாரி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லுாரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை மூலம் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும்.
பாரதிதாசன், புதுச்சேரி பல்கலைக்கழகம், சட்டக்கல்லுாரி மாணவர்களை சேர்த்து பொதுவாக பஸ் இயக்க வேண்டும். தனி டெண்டர் விட்டு தனியார் மூலம் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநரிடம் அறிவுறுத்தி உள்ளேன் எனக் பேசினர்.
விழாவில் கல்லுாரி முதல்வர் வீரமோகன், முன்னாள் மாணவிகள் சங்க தலைவர் சிவப்பிரியா, செயலர் சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.