கடன் தருவதாக ரூ.8.20 லட்சம் அபேஸ் மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை

விழுப்புரம்: கடன் தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் அபேஸ் செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஒழுந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன் மகன் ராஜி,46; தச்சு தொழிலாளி. இவரை மொபைல் போனில் கடந்தாண்டு செப்., 10ம் தேதி தொடர்பு கொண்ட நபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், லோன் தேவையெனில் தங்களின் விபரங்களை அனுப்பி வையுங்கள் என தெரிவித்துள்ளார்.

ராஜி தனது ஆதார், பான், வங்கி புத்தக நகலை அனுப்பினார். ரூ.10 லட்சம் லோன் தருவதாகவும், இந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்த டாக்குமென்ட் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் அனுப்ப வேண்டும். இதை கடன் தொகையோடு திரும்ப தரப்படும் என கூறினார். அதன்பேரில் ராஜி ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.

ஆனால் லோன் தராமல் மேலும் பல காரணங்களை கூறி பணம் கேட்ட போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராஜி நேற்று விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement