வி.சி., பிரமுகரை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை
கோட்டக்குப்பம்: வி.சி., பிரமுகரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முகமதுஷெரிப், 42; வி.சி., நகர பொருளாளர். இவரது மகன் யூசுப் அலி,18; இவர் நேற்று முன்தினம் கோட்டைமேடு பகுதியில் டி.வி., கேபிள் பணி செய்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர், யூசுப் அலியை தாக்கினர்.
இதையறிந்த அவரது தந்தை முகமது ஷெரீப், தனது ஆதரவாளர்களுடன், தாக்கிய இளைஞர் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கலைந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் முகமது ஷெரீப் இரவு 9;30 மணிக்கு குடும்பத்தினருக்கு டிபன் வாங்கிக் கொண்டு பூந்தோட்டம் வீதி வழியாக சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கும்பல், முகமது ஷெரீப்பை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
படுகாயமடைந்த முகமது ஷெரீப்பை, அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கோட்டைமேட்டை சேர்ந்த சுதாகர், ரஞ்சித், பாலா, விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர்.