குப்பை அள்ளியதில் முறைகேடு விசாரணை அதிகாரி நியமனம்
பெங்களூரு: 'பெங்களூரு, காந்தி நகரில் திடக்கழிவுகள் அள்ளிக் கொண்டு சென்ற வகையில் 2.10 கோடி ரூபாய் பில் தொகை வழங்கி மோசடி நடந்துள்ளது' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., முன்னாள் தலைவர் என்.ஆர்.ரமேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து விசாரிக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திடம் நேற்று பெங்களூரு தெற்கு பா.ஜ., முன்னாள் தலைவர் என்.ஆர்.ரமேஷ் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
பெங்களூரு மாநகராட்சியின் 28 சட்டசபை தொகுதிகளில், காந்திநகர் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் முறைப்படி டெண்டரில் பங்கேற்று, பணி உத்தரவு கடிதங்கள் பெற்றுள்ளனர். காலை நேரத்தில் குப்பை அள்ளும் பணி நடந்து வருகிறது.
காந்தி நகர் சட்டசபை தொகுதியில் மட்டும், மூன்று, நான்கு ஆண்டுகளாக தினமும் மூன்று நேரமும் குப்பை அள்ளியதாக, பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்து, 2.10 கோடி ரூபாய் முறைகேடாக பில் தொகை பெற்றுள்ளனர்.
இம்முறைகேட்டில், மேற்கு மண்டல நிதிப்பிரிவு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. மேற்கு மண்டல வார்டுக்கு உட்பட்ட சுகாதார கண்காணிப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா, போலியான ஆவணங்களை தாக்கல் செய்து, பில் தொகையை பெற்றுள்ளார். இது தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும். இதற்காக உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சிறப்பு கமிஷனர் சுரத்கல் விகாஸ் கிஷோரை நியமித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து, விரிவாக விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.