கால்வாயில் கார் விழுந்து மூவர் பலி

மாண்டியா: வேகமாக சென்ற கார் ஒன்று, கால்வாய்க்குள் பாய்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

மாண்டியாவின் திப்பனஹள்ளி கிராமத்தின் விஸ்வேஸ்வரய்யா கால்வாய் அருகில் நேற்று மதியம் அதிவேகமாக வந்த கார் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாய்க்குள் பாய்ந்தது. காரில் நால்வர் இருந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த ஷிவள்ளி போலீசார், அப்பகுதியினர் உதவியுடன், காரை கால்வாயில் இருந்து மீட்டனர். கார் ஓட்டுனர் பயாஜ் உயிரிழந்தார்.

இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நயாஜ் என்பவர் காப்பாற்றப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட இருவரை மீட்புப் படையினர் தேடுகின்றனர்.

கால்வாயில் அதிகமான தண்ணீர் பாய்வதால், மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தும்படி, நீர்ப்பாசன அதிகாரிகளை போலீசார் கேட்டுக் கொண்டனர். இதன்படி, மாலை 5:00 மணியளவில் தண்ணீர் வரத்து குறைந்ததால், தொடர்ந்து தேடுகின்றனர்.

விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் வாகனம் கவிழ்வது இது முதன் முறையல்ல. 2018 நவம்பரில், மாண்டியா, பாண்டவபுராவின், கனகனமரடி கிராமத்தின் விஸ்வேஸ்வரய்யா கால்வாயில், பஸ் கவிழ்ந்து 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதே போன்று, பல முறை கார் கவிழ்ந்து உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.

Advertisement