கிரைம் கார்னர்

* ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

துமகூரு துருவகெரேவின் அம்மசந்திரா கிராமத்தில் வசித்தவர் சாயாங்க் கவுடா, 26. பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய இவர், நேற்று காலை, துமகூரு ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில், ரயிலில் இருந்து இறங்கியபோது, தவறி விழுந்து ரயிலுக்குள் சிக்கி காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

* நீரில் மூழ்கி இருவர் சாவு

ஹாசன், சென்னராயபட்டணாவின் ஜின்னாபுராவில் வசித்தவர்கள் கணேஷ், 29, ரோஹித், 28. இவர்கள் நேற்று முன் தினம் மாலை, குளிப்பதற்காக ஏரிக்குச் சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

* மொபைல் பறிப்பு

பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின் திப்பராயசுவாமி கோவில் சாலையில், நேற்று அதிகாலை பாபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். முகக்கவசம் அணிந்து வந்த மர்மநபர், பாபுவின் கையை கத்தியால் கிழித்துவிட்டு, மொபைல் போனை பறித்துத் தப்பினார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

* காரில் தீ

பெங்களூரின் லால்பாக் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நேற்று மாலை, நின்றிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. அதன் பக்கத்தில் நின்றிருந்த பைக்கிலும் தீப்பரவியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

* செயின் திருடர்கள் கைது

துமகூரு நகரில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து, செயின் வழிப்பறி செய்து வந்த தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த பரத், 40, ஜமீலுதீன், 38, ஆகியோரை துமகூரு போலீசார் கைது செய்தனர். 6.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.

Advertisement