கட்டாய மதமாற்றத்தை தடுக்க ராஜஸ்தானில் சட்ட மசோதா

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில், அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர், மதமாற்றத் தடைச்சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும். 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும்50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மதம் மாற்றும் நோக்கோடு நடத்தப்படும் திருமணங்கள், நீதிமன்றங்கள் வாயிலாக செல்லாததாக அறிவிக்கப்படும். எந்த ஒரு தனிநபரும், தன் மதத்தை பின்பற்றவோ, பிரசாரம் செய்யவோ உரிமை உண்டு. ஆனால், மதமாற்றத்தில் ஈடுபட முடியாது.

நிர்ப்பந்தமாகவோ, ஏமாற்றியோ, திருமணம் வாயிலாகவோ நடக்கும் மதமாற்றத்தை தடுப்பதே மசோதாவின் நோக்கம்.

கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர், பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஒருவர், தானாகவே மதம் மாற விரும்பினால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம், 60 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement