திருச்செந்துார் கோவிலில் வள்ளி குகை சீரமைப்பு
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடக்கின்றன. எச்.சி.எல்., நிறுவனம் 200 கோடியும், தமிழக அரசு 100 கோடியும் ஒதுக்கி, 2022ல் பணிகள் துவங்கின.
வரும் ஜூலை 7ல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோவில் ராஜகோபுரம், கும்ப கலசங்கள், கோவில் வளாகங்கள் சீரமைக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வள்ளி குகையும் புதுப்பிக்கப்படுகிறது.
குகையின் உள்ளே முருகன் மற்றும் வள்ளி புராணத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிலைகள் உள்ளன. குகையின் முன், 24.5 அடி நீளமும், 21.5 அடி அகலமும் கொண்ட, 16 துாண்களுடன் கூடிய மண்டபம் கட்டப்பட்டுஉள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்ட வள்ளி குகை, மீண்டும் தற்போது புதுப்பிக்கப்படுகிறது.
வள்ளி குகை சுற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது. தற்போது வள்ளி குகையில் இருந்து கடலை ரசிக்கும் வண்ணம் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. மேலும், வள்ளி குகை பகுதியில் இருந்த காயத்ரி தீர்த்தக்கிணறும் புதுப்பிக்கப்பட உள்ளது.
இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.