பாலின அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் தனித்துறை தேவை

மதுரை: பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கான ஆலோசனை, கவுன்சிலிங், சிகிச்சை வழங்குவதற்கு மதுரை அரசு மருத்துவமனையில் தனித் துறை அமைக்க வேண்டும்.

இம்மருத்துவ மனையில் 2021 முதல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 2024 டிசம்பர் வரை பெண்ணாக இருந்த 158 பேருக்கும், ஆணாக இருந்த 65 பேருக்கும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கான மருத்துவ வாரியம் மூலம் 738 பேருக்கு பாலினம் மாறியோருக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்டோர் புறநோயாளியாக சிகிச்சை பெற வருகின்றனர். ஏற்கனவே 1726 நோயாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனை 4வது வார்டில் வியாழக் கிழமை தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. ஆணாக இருந்து பெண்ணாக மாற விரும்புவோர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களுக்கான பிறப்புறுப்பு அறுவை சிகிச்சைக்குப் பின், தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால் முதலில் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. பெண்ணாக மாற வேண்டும் என உறுதியாக இருப்பவர்களுக்கே அறுவை சிகிச்சை செய்யப்படும்.

வாரம் ஒருநாள் வீதம் மனநல ஆலோசனை பெறுவதற்கே 2 முதல் 3 மாதங்களாவதால் அதிருப்தி அடைகின்றனர். புறநோயாளிகள் பிரிவு, மனநல ஆலோசனை, அறுவை சிகிச்சை நடைமுறைகளை முழுமையாக்கி தனித்துறையாக செயல்பட்டால், பாலினம் மாற விரும்புவோருக்கு வசதியாக இருக்கும்.

Advertisement