புற்றுநோய் ஒழிப்பு தேசிய பிரசாரம் துவக்கம்
மதுரை: 'இந்தியாவில் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மத்திய அரசு வகைப்படுத்த வேண்டும்' என்பதை வலியுறுத்தி ஒன்றிணைந்து அறிவிப்போம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பிரசாரத்தை மதுரை அப்போலோ புற்றுநோய் மையம் துவக்கியது.
இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ), இந்திய அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கம், மதுரை புற்றுநோய் சங்கம் ஏற்பாடுகளை செய்தன.
மதுரை அப்போலோ புற்றுநோய் மைய மருத்துவ நிபுணர்கள் முத்துக் குமாரசாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சர்ப்பராஜன், பாலு மகேந்திரா, கதிரியக்க நிபுணர் சதீஷ் ஸ்ரீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி நீலகண்ணன் கூறியதாவது:
இம்மையத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சியை செயல்படுத்த உறுதி கொண்டுள்ளோம். இந்தியாவில் ஆண்டுக்கு 14 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அங்கீகரிப்பது மூலம் தகவல்களை சேகரித்து துல்லிய அறிக்கையை உறுதி செய்யலாம்.
சுகாதார மற்றும் குடும்ப நலக் குழுவின் பார்லிமென்ட் நிலைக்குழு 2022 ல் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக வகைப்படுத்த வேண்டும் என்று ராஜ்யசபைக்கு அறிக்கை சமர்ப்பித்தது. பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்சபா, ராஜ்யசபாவில் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்றனர்.
ஐ.எம்.ஏ., துணைத் தலைவர் ஜெபசிங் கூறுகையில், ''புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மாற்றும் முயற்சியில் ஐ.எம்.ஏ., உறுதியாக உள்ளது.
இந்தியாவில் ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்கம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழகம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தானில் ஏற்கனவே புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளனர்'' என்றார்.
மருத்துவ சேவை இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், பொது மேலாளர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் பிரேம் டேனியல் கலந்து கொண்டனர்.