அட்டை லோடு ஏற்றிய லாரி திடீர் தீயில் எரிந்து நாசம்
ஓசூர்,:தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியிலுள்ள தனியார் அட்டை நிறுவனத்தில் லோடு ஏற்றிய ஐச்சர் லாரி நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரத்திலுள்ள தனியார் அட்டை நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது.
கர்நாடகா மாநிலம், விஜயபுராவை சேர்ந்த ஜெக்கப்பா, 43, லாரியை ஓட்டினார். கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஒட்டையனுார் பஸ் ஸ்டாப் அருகே மாலை, 4:00 மணிக்கு, லாரியின் முன்பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் ஜெக்கப்பா, சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி உயிர் தப்பினார். லாரியில் அட்டை லோடு இருந்ததால், தீ மளமளவென பரவி, பெட்ரோல் டேங்க் மற்றும் டயர்கள் வெடித்து, அருகில் செல்ல முடியாத அளவிற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி மற்றும் அட்டை லோடுகள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.