சின்னம்மாபேட்டையில் குப்பையால் சுகாதார சீர்கேடு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட நகர்களில், 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பையை அகற்ற பூஞ்சோலை நகர் பகுதியில், ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வாயிலாக கொட்டகை அமைத்து குப்பை தரம் பிரிக்க கூடம் அமைத்துள்ளது.

இந்த கூடம், ஓராண்டாக செயல்படாத நிலையில், அந்தந்த பகுதிகளில் சேகரமாகும் குப்பையை தூய்மை பணியாளர்கள் ஊராட்சியின் முக்கிய சாலையோரங்கள், ஓடை, உயர்மட்ட பாலம் பக்கவாட்டில் கொட்டி விடுகின்றனர்.

இதனால் ஊராட்சியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதுடன் மக்கள் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, குப்பை ஆங்காங்கே கொட்டப்படுவதை தடுக்கவும், சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து அகற்றும் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, திருவாலங்காடு ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement