பெரிய ஊராட்சி, ஒன்றியங்களை பிரித்தால் நிர்வாகம் 'செம'யா இருக்கும்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகள், ஒன்றியங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என ஊழியர்கள், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மக்கள் தொகை அதிகரிக்கும்போது அரசின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள், தாலுகாக்களை பிரிப்பது வழக்கமானதுதான். இதுபோல வளர்ச்சித் துறையில் ஒன்றியங்களையும் பிரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையில் 1963 முதல் ஒன்றியங்கள், ஊராட்சிகள் எதுவும் பிரிக்கப்படவில்லை.

60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகை எவ்வளவோ அதிகரித்துவிட்டது. வருவாய்த் துறையில் தாலுகாக்கள், மாவட்டங்கள் பல உருவாக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் 7 ஆக இருந்த தாலுகாக்கள் சில ஆண்டுகளுக்கு முன் 11 ஆக அதிகரித்தது. ஆனால் ஊரக வளர்ச்சித் துறையில் ஒன்றியங்கள் 13, ஊராட்சிகள் 420 தான் இன்றும் உள்ளன.

எனவே 5 ஆயிரம் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு ஊராட்சிகளையும், 75 ஆயிரம் மக்கள் தொகை அடிப்படையில் ஒன்றியங்களையும் பிரிக்கலாம் என ஊரக வளர்ச்சித் துறையினர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வகையில் மதுரை மாவட்டத்தில் 5 புதிய ஒன்றியங்கள், 34 புதிய ஊராட்சிகளை உருவாக்கலாம்.

திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் உள்ள கரடிப்பட்டியில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதேபோல நாகமலை புதுக்கோட்டையில் (17 ஆயிரம்), நிலையூர் 1 பிட் (19 ஆயிரம்), பெருங்குடி, விளாச்சேரி ( தலா 12 ஆயிரம்) ஊராட்சிகளில் அதிகளவு மக்கள் தொகை உள்ளது. கிழக்கு ஒன்றியத்தில் 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் ஒத்தக்கடை (17 ஆயிரம்), ஆண்டார் கொட்டாரத்தில் (13 ஆயிரம்) அதிக மக்கள் உள்ளனர். மதுரை மேற்கு ஒன்றியத்தில் 1.15 லட்சம் பேர் உள்ளனர். மேலுார் ஒன்றியத்தில் 1.50 லட்சம் பேர் உள்ளனர்.

இந்த ஒன்றியத்தின் அம்பலக்காரன்பட்டியில் 11 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். இவையெல்லாம் 2011 கணக்கெடுப்பின்படியான மக்கள் தொகை. இன்றைய நிலவரப்படி இன்னும் பல ஊராட்சிகள் 10 ஆயிரம் எண்ணிக்கையை தாண்டி இருக்கும்.

அரசிடம் வலியுறுத்தல்



இது போன்ற ஊராட்சிகளை பிரித்தால் நிர்வாகம் எளிமையாகும். ஏனெனில் தற்போது கிராமப்புற பகுதிகள், ஒன்றியங்களில் உள்ளாட்சி நிர்வாகம் முடிவுக்கு வந்துவிட்டது. ஊராட்சி தலைவர்கள் இல்லாத நிலையில், இவற்றை பி.டி.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இவர்களுக்கான வேலைப்பளுவில் தற்போது ஊராட்சிகளும் கூடுதல் சுமையாக உள்ளதால் ஊராட்சி செயலர்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் பணிகள் விரைவாக நடப்பது சிரமமே.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: உள்ளாட்சி நிர்வாகம் சீராக இருக்க வருவாய்த் துறையை போல ஒன்றியம், ஊராட்சிகளையும் பிரிக்கலாம். இதன் மூலம் பணிகளை விரைவு படுத்தலாம். இதனை எங்களின் 20 அம்ச கோரிக்கைகளுள் ஒன்றாக வைத்துள்ளோம். இதற்காக பலமுறை வளர்ச்சித்துறையின் அரசுச் செயலர், இயக்குனர்களை சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆர்ப்பாட்டம், தற்செயல்விடுப்பு என பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதுவரை நிறைவேறவில்லை என்றார்.

Advertisement