சிவகங்கையில் மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாசாரம்
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் முகூர்த்த நாட்களில் ஒவ்வொரு திருமண மண்டபம் முன்,ரோடுகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர், ரோடுகளில் ஊன்றப்படும் கொடி கம்பங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.உள்ளாட்சி அமைப்பு,போலீசார் இதனை கண்டு கொள்வதேயில்லை.
சிவகங்கை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.நகராட்சிக்கு அருகாமையில் வாணியங்குடி, காஞ்சிரங்கால், சூரக்குளம், சக்கந்தி, முத்துப்பட்டி, பையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் இருந்து தினசரி வேலைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களில் சிவகங்கை வந்து செல்கின்றனர்.
நகருக்குள் பல திருமண மண்டபங்கள் உள்ளது.பல மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லாமல் ரோட்டின் மேல் உள்ளது.முகூர்த்த நாட்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்காகவும், அதில் பங்கேற்க வரும் அரசியல் வாதிகளை வரவேற்பதற்காக அவர்கள் சார்ந்த கொடி கம்பங்களை ரோட்டின் இருபுறங்களிலும் வைக்கின்றனர்.
நீதிமன்றம் பிளக்ஸ் பேனர் கொடிக்கம்பங்களை வைக்க தடை விதித்தும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.