திருப்பரங்குன்றம் போராட்டம்: பஜனை பாடி ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் போராட்டம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருப்பரங்குன்றம் அறப்போராட்டத்திற்கு செல்ல முயன்று பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் தடுத்ததால் பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா காரிலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி ஹிந்து முன்னணி சார்பில் நேற்று அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று காரைக்குடி ஹிந்து முன்னணி அலுவலகத்தில் இருந்து ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அக்னி பாலா, பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் நாகராஜன் தலைமையில் 15 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதில் பங்கேற்க புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்து தனியார் மகாலில் அடைத்தனர்.

காரில் காத்திருந்த எச்.ராஜா



பா.ஜ., தேசிய முன்னாள்செயலாளர் எச். ராஜா காரைக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல காரில் புறப்பட்டார். டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார் அவரை போராட்டத்திற்கு செல்ல அனுமதி அளிக்காமல் தடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும் எச்.ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரை விட்டு இறங்காமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எச்.ராஜா காரிலேயே காத்திருந்தார். தொடர்ந்து வந்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பின் அடிப்படையில் அவர் அங்கிருந்து சென்றார்.

சிவகங்கை மாவட்ட போலீசார் திருப்பரங்குன்றம் அறப்போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக பா.ஜ., ஹிந்து முன்னனி அமைப்பினரை நேற்று முன் தினம் முதல் கண்காணிக்க தொடங்கினர். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சிவகங்கை நகர் பா.ஜ., தலைவர் உதயாவை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். நேற்று அதிகாலை அவர் மற்றும் பா.ஜ கிழக்கு ஒன்றிய தலைவர் நாட்டரசு மற்றும் முத்துப்பட்டி பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Advertisement