திருப்பரங்குன்றம் மலை, கோவிலுக்கு சொந்தம்; அண்ணாமலை திட்டவட்டம்

29

சென்னை: திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.


இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: திருப்பரங்குன்றம் சரித்திரம் அமைச்சர் சேகர்பாவுக்கு தெரியுமா? 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. பிரிவி கவுன்சில் 1931ல், மலை கோவிலுக்கு சொந்தம் என்று தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளது. இதன் பிறகு பிரச்னை முடிந்தது. மலை கோவிலுக்கு தான் சொந்தம்.


ஆங்கிலேயர்கள் ஹிந்து மக்களுக்காக தற்காத்த கோவிலை, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வினர் கொடுப்பதற்கு தயாராக இருப்பது தான் வேடிக்கை. திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு பிரிவி கவுன்சில் தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும். மலை முழுமையாக கோவிலுக்கு சொந்தம் என தீர்ப்பில் உள்ளது. அமைச்சர் சேகர்பாபு காவி உடை அணிந்து முருக பக்தர் என்று கூறினால் போதாது.


போலீசார் 300க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரை வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளனர். போலீசாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அந்தந்த ஊரில் பா.ஜ.,வினரை நீங்கள் வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். தெருவில் எங்கள் கட்சியினர் பெரியாளாகி கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.,வினரை மக்கள் நாயகர்களாக கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement