காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம்!

3

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, 2030 ம் ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்து அந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


உலகளவில், விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. இப்போட்டிகளை 2036ம் ஆண்டு நடத்த விருப்பம் தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.


இதற்கு அடுத்த விழாவாக பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டிகள், அடுத்து 2026ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆக., 2 வரை நடக்கிறது. காமன்வெல்த் அமைப்பில் உள்ள 74 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 2010ம் ஆண்டு இந்த போட்டிகள் இந்தியாவில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில், 2030ம் ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புவதாகவும், இதற்காக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை இப்போட்டிகள் டில்லியை தவிர்த்து குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரங்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.


காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ் ஜென்கின்ஸ் மற்றும் தலைமை நிர்வாகி கேத்தி சாட்லர் ஆகியோர் கடந்த வாரம் டில்லி, காந்திநகர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களுக்கு சென்றனர். அங்கு அவர்களை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். டேராடூனில் தேசிய விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த ஜென்கின்ஸ், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை சந்தித்தார். அப்போது, காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்க கடைசி நாளான மார்ச் 31ம் தேதிக்குள் உரிய விண்ணப்பம் செய்யும்படி ஜென்கின்ஸ் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆமதாபாத்தில் தங்கியிருந்த கிறிஸ் ஜென்கின்சை, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்கவி மற்றும் அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது, 2036 ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement