சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துவது ஏன்!

3

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுப்பி வைக்க அந்நாடு ராணுவ விமானங்களை பயன்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற உடன், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை அறிவித்ததுடன், நாடு கடத்தும் நடவடிக்கையையும் முடுக்கிவிட்டார். பிரேசில், கொலம்பியா, இந்தியாவை சேர்ந்த பலர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான சி-17 விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.


இந்த விமானங்களில் ஒருவரை அனுப்பி வைக்க அந்நாட்டிற்கு 4,675 டாலர் செலவாகிறது. இது அமெரிக்க விமானங்களில் முதல் வகுப்பில் பயணிக்க ஆகும் 853 டாலர் தொகையை விட 5 மடங்கு அதிகம் ஆகும். நீண்ட தூரங்களில் உள்ள நாடுகளுக்கு ஆகும் செலவு இன்னும் அதிகரிக்கும்.


இவ்வாறு அதிக செலவாகும் ராணுவ விமானத்தை டிரம்ப் பயன்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பம் முதலே , அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ' ஏலியன்கள்' கிரிமினல்கள், அமெரிக்கா மீது சட்டவிரோதமாக படையெடுத்தவர்கள் என டிரம்ப் கூறி வருகிறார். அவர்களை அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் மூலம், இது போன்ற குற்றங்களை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என டிரம்ப் ஒரு செய்தியை அனுப்பவே ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதனை பிரதிபலிக்கும் வகையில், சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்கள் கைகளி்ல விலங்கு போட்டு கிரிமினல்களை போல் அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.


சமீபத்தில் குடியரசு கட்சி எம்.பி.,க்கள் மத்தியில் டிரம்ப் பேசும்போது, வரலாற்றில் முதல்முறையாக சட்டவிரோதமாக வந்த ஏலியன்களை, ராணுவ விமானம் மூலம் அவர்கள் வந்த இடத்திற்கே அனுப்பி வைக்கிறோம். இத்தனை நாட்கள் நம்மை முட்டாள் என நினைத்து சிரித்தவர்கள் தற்போது நம்மை மதிக்கின்றனர் ' என்றார்.


சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து மேல்முறையீடு செய்யும் அவகாசத்தையும் வழங்க டிரம்ப் விரும்பவில்லை. அவர்கள் அடுத்த 20 ஆண்டுகள் முகாமில் அமர்ந்து கொண்டிருப்பது தனக்கு பிடிக்கவில்லை எனுக்கூறிய அவர், அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு அனுப்பி வைக்கவே விரும்புகிறேன் என்றார்.


சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுப்பி வைக்கும் பணி துவங்கிய முதல் நாள் அன்றே, வெள்ளை மாளிகையின் பத்திரிகை துறை அதிகாரி கரோலின் லிவெட், புகைப்படங்களை வெளியிட்டு, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறினால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார் எனக்கூறியிருந்தார்.
அதேநேரத்தில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பிடிக்கவில்லை.


குறிப்பாக கொலம்பியா மற்றும் பிரேசில் நாட்டு தலைவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுப்பி வைக்க ராணுவ விமானத்தை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Advertisement