அமெரிக்கா வழியில் அர்ஜென்டினா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல்
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவும் வெளியேறி உள்ளது.
அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கோவிட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை எனக்குற்றம்சாட்டி அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.
இதற்கு அடுத்தபடியாக டிரம்ப்பின் நெருங்கி நண்பரான ஜேவியர் மைலி ஆட்சி செய்யும் அர்ஜென்டினாவும் அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளது. கோவிட் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை. இதனால், ஆழ்ந்த பிரச்னைகள் உருவானதாக மைலி குற்றம்சாட்டி உள்ளார். மேலும், கோவிட் காரணமாக முந்தைய ஆட்சி காலத்தில் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்பு சுதந்திரமாக செயல்படாமல் மற்ற நாடுகளின் அரசியலுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பில் அர்ஜென்டினா பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை துவக்கும்படி வெளியுறவு அமைச்சருக்கு அதிபர் உத்தரவிட்டு உள்ளார் எனக்கூறியுள்ளார்.