பைனலில் மும்பை கேப்டவுன் * 'எஸ்.ஏ.20' தொடரில்

கெபேஹா: தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் தகுதிச்சுற்று 1ல் மும்பை கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராயல்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரிக்கிள்டன் (44), துசென் (40), பிரிவிஸ் (44) கைகொடுத்தனர். லிண்டே 26, டிலானோ 32 ரன் எடுத்தனர். மும்பை அணி 20 ஓவரில் 199/4 ரன் குவித்தது.
கடின இலக்கைத் துரத்திய ராயல்ஸ் அணிக்கு பிரிட்டோரியஸ் (15), ஓவன் (7) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. தினேஷ் கார்த்திக் 31 ரன் எடுக்க, கேப்டன் மில்லர் 26 பந்தில் 45 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அணியை கைவிட்டனர். ராயல்ஸ் அணி 19.4 ஓவரில் 160 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.
39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை கேப்டவுன் அணி, இத்தொடரில் முதன் முறையாக பைனலுக்கு (பிப். 9) முன்னேறியது. இதில் 2 விக்கெட் சாய்த்த மும்பை கேப்டன் ரஷித் கான் (633 விக்.,), 'டி-20' அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் ஆனார்.

ரஷித் கான் '633'
ஆப்கானிஸ்தான் பவுலர் ரஷித் கான் 26. கடந்த 2015 முதல் 'டி-20'ல் பங்கேற்கிறார். சர்வதேசம் 'டி-20'ல் 96 போட்டியில் 161 விக்கெட் சாய்த்துள்ளார். ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் அதிக விக்கெட் சாய்த்தவர்களில், நேற்று இவர் 'நம்பர்-1' ஆனார். இதுவரை 461 போட்டியில் 633 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் பிராவோ (582ல் 631), சுனில் நரைன் (536ல் 574) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

Advertisement