குறிஞ்சி மலையில் வனத்தீ 4 ஏக்கர் வன வளம் சேதம்

குன்னுார்:குன்னுார் ஓதனட்டி அருகே குறிஞ்சி மலையில் ஏற்பட்ட தீயில், 4 ஏக்கர் பரப்பளவில், அரிய வகை தாவரங்கள் சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டம், குன்னுார் ஓதனட்டி அருகே உள்ள குறிஞ்சி மலைப்பகுதியில், ராணுவ மையத்தின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வனத்தீ ஏற்பட்டு, குறிஞ்சி செடிகளும், அரிய வகை தாவரங்களும் சேதமாகின.

அங்கு சென்ற ராணுவ வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்திற்கு தண்ணீர் வாகனங்கள் கொண்டு சென்று தீயை அணைக்க முடியாத நிலையில், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து, குன்னுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து, இரவு 10:30 மணி முதல், நேற்று அதிகாலை 2:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.

வனத்தீ ஏற்பட்டதால், 4 ஏக்கர் பரப்பளவிலான வனவளங்கள் சேதமாகின. இங்கு, தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement