விருதையில் பராமரிப்பற்ற விளையாட்டு மைதானம்

விருத்தாசலம்; விருத்தாசலம் நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி வளாகத்திற்குள் கடந்த 2006ம் ஆண்டில், 400 மீட்டர் ஓடுதளம், பார்வையாளர் அமரும் கேலரி, விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பு அறை கட்டப்பட்டன. மேலும், அரிமா சங்கம் சார்பில் சுற்றுச்சுவர், குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டன.

இங்கு கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி, விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுவட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இங்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் உள்ளிட்ட தடகள போட்டிகள், கால்பந்து, இறகு பந்து, கபடி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும், இளைஞர்கள், முதியோர் காலை, மாலை வேளைகளில் விளையாட்டு மற்றும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். நகர மக்கள் பயன்பெறும் வகையில் இருந்த விளையாட்டு மைதானம், தற்போது பராமரிப்பின்றி முட்புதர் மண்டி பாழாகியுள்ளது. ஓடுதளம், கால்பந்து மைதானம் முழுவதும் புதர்மண்டி, முட்கள், கற்கள் சிதறி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும், மைதானத்தின் அருகே முட்புதர் மண்டிக்கிடக்கும் பகுதியில் இருந்தும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் மைதானத்திற்குள் படையெடுப்பதால் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

சமீபத்தில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாற்றுத்திறன் மாணவர் கவிநிலவன், குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று, 2027ல் அமெரிக்காவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுபோல், அரசு பள்ளி மாணவர்கள் பலரும் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து வருகின்றனர்.

எனவே, அரசு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் சாதனைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் மைதானத்தை சீரமைத்து, நவீன விளையாட்டு உபகணரங்களை வழங்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் மைதானத்தை பராமரிக்க ஊழியர்கள் நியமிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement