வெலிங்டன் நீர்த்தேக்கத்தை சுற்றுலா தளமாக மாற்ற கோரிக்கை! மக்கள் எதிர்பார்ப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848259.jpg?width=1000&height=625)
திட்டக்குடி; திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என கடலுார், அரியலுார், பெரம்பலுார் ஆகிய மூன்று மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் பிரதான நீர்த்தேக்கமாக வெலிங்டன் உள்ளது. 2,580 மில்லியன் கனஅடி நீர்பிடிப்பு கொண்டது. இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பருவமழை மற்றும் கோடை மழை காலங்களில் வெலிங்டன் நீர்த்தேக்கம் முழுகொள்ளளவு நீர் நிரம்பி கண்களுக்கு எட்டிய துாரம் வரை காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வெலிங்டன் நீர்த்தேக்கத்தை கண்டு ரசிக்க சுற்றியுள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வந்து செல்வது மட்டுமன்றி அருகிலுள்ள அரியலுார், பெரம்பலுார் மாவட்ட மக்களும் இங்கு அமர்ந்து நீர்த்தேக்கத்தை பார்த்து, களைப்பாறி செல்கின்றனர்.
கோடை காலங்களில் நீர்த்தேக்கத்தில் பல அரிய வகை பறவைகள் வருவதால் சுற்றுலா தளம் போன்று காட்சியளிக்கும். ஆனால் நீர்த்தேக்கத்தை காணவரும் பொதுமக்களுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. நீண்ட தொலைவில் இருந்து வருவோர் சுகாதாரமான உணவு, தண்ணீர் கிடைப்பது இல்லாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தி சுற்றுலா தளமாக மாற்றி படகு சவாரி ஏற்படுத்த மாவட்ட நிர்வாம், சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், 'குடும்பத்தோடு இங்கு வரும் மக்களுக்கு படகு சவாரி, சிறுவர் பூங்கா, ஓட்டல், கழிவறை வசதி, தங்கும் விடுதி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அனைத்து அடிப்படை தேவைகளும் அமைத்தால் நீர்த்தேக்கத்தில் நீர்ப்பிடிப்பு காலங்கள் தவிர மற்ற கோடை காலங்களிலும் ஏராளமானோர் வந்து செல்ல வாய்ப்புள்ளது' என்றனர்.
திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கம் விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாகவும், பொது மக்கள் கவலைகளை மறக்க வந்து செல்லும் ரம்மியமான இயற்கை சூழல் பகுதியாகவும் உள்ளது.நீர்த்தேக்கத்தை தொகுதியின் எம்.எல்.ஏ.,வும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கணேசன் ஆய்வு செய்து, சுற்றுலா தளமாக மாற்றி, படகு சவாரி செய்ய ஏதுவாகவும் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பல மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
குஜராத்தில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த 2 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி
-
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: முள்ளோடையில் பரபரப்பு
-
காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது